Saturday, August 20, 2016

‘கொல்லாமை – புலால் மறுத்தல்’



‘அறம் செய்ய விரும்பு’ என்றாள் தமிழ் மூதாட்டி. இந்தியாவில் தோன்றிய தர்மங்கள் அனைத்தும், அருளாளர் அனைவரும் உணர்த்தும் உன்னதமான அறங்கள் பலப்பல. அறங்களில் தலையாயது எது..?! 


கொல்லாமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்தவர் நம் முன்னோர். முற்றுப்பெற்ற ஆசான் திருவள்ளுவரின் குறள்களைப் படிப்பதோடு நில்லாது ஆய்ந்துணருங்கள். நான் திருக்குறள்படி வாழ்வை நடத்துபவன். புலால் உண்பதில்லை. புலால் உண்பது உங்கள் உணவுப் பழக்கமாக இருக்கலாம். அதில் தலையிட எமக்கு உரிமையில்லை. ஆனால் அந்த உயிர்கள் வாழும் சொற்ப காலத்தில் துன்பம் தராமல் இருப்பது நல் மனிதாபானம் ஆகும். கொல்லும்போது தூதுவர் முகமது நபி அவர்கள் கூறியபடி அவற்றிற்கு வேதனையைக் குறைப்பது மனிதாபமான செயலாகும்.

திருவள்ளுவர் ‘கொல்லாமை – புலால் மறுத்தல்’ என்று இரு அதிகாரங்களில் ‘எக்காரணம் கொண்டும் ஒரு உயிரை கொல்லாது இருத்தல் – புலால் உணவை உண்ணாது இருத்தல்’ என்ற இவ்விரு செயல்களுமே அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

‘அன்பே சிவம்’ என்று முழங்கிய பரம ஞானி திருமூலர் ‘கொல்லாமை – புலால் மறுத்தல்’ என்ற பகுதிகளில் அறம் அல்லாத இவ்விரு செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார். ‘கொல்லாமை’ என்ற மலரே பூஜைக்கு உகந்த முதன்மையான மலர் என்றும், ‘புலால் உணவை உட்கொள்வது’ நரகத்துக்கு இணையான பெரும் துன்பத்தைப் பெற்றுத் தருவது உறுதி என்றும் குறிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் – கொல்லாமை:-
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர்
அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்…

திருமந்திரம் – புலால் மறுத்தல்:-
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே.

இராமலிங்க வள்ளலார்:-
19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்சுடரான வள்ளலார் ‘புலால் உணவை உட்கொள்ளும் வரை இறைவனின் அருளைப் பெற முடியாது’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இறைவன் கருணை வடிவானவன். கருணை எங்கு இல்லையோ – அங்கு இறைவன் வசிப்பதில்லை.

கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் -வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் -அன்றே!!!!

புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார்.

வேதங்கள் – உபனிடதங்கள் – சாத்திரங்கள் – பக்தி இலக்கியங்கள் – ஞானிகளின் வாக்குகள் – இவை உணர்த்தும் நீதிகள் என்றுமே இப்புவியில் பொய்ப்பதில்லை. அறம் செய விரும்புவோம்!!!!

கொல்லாமை – (திருக்குறள்):
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

தன் உயிரையே இழக்க வேண்டிய நிலை உருவாயினும், வேறு ஒரு உயிரை அதன் உடலில் இருந்து நீக்கும் செயலை செய்தல் கூடாது!!!

புலால் மறுத்தல் (திருக்குறள்):-
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவரை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்…

(கொன்றை வேந்தன் – அவ்வையார்):-
புலையும் கொலையும் களவும் தவிர் (வரி: 63)

கடவுள் அருள் பெறுவதற்காக ஆடு, கோழி, பன்றி, எருமை போன்ற உயிர்களைப் பலியிடுகின்றார்கள். அப்படிப் பலிகொடுத்தால் இறையருள் பெறமுடியாது. பாவந்தான் மிகுதியாகும். உயிர்ப்பலி கொடுக்கக் கொடுக்க வறுமையும், பிணியும், பகைமையும், மனவுளைச்சலுமே ஏற்படும் என்று சித்தர்கள் தம்பாடலில் அருளியுள்ளார்கள்.

எடுத்துக்காட்டு:
"தங்கள் தேகம் நோய் பெறின்
தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப்
பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து
நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்களை
உருக்குலைப்பது உண்மையே."
- ஆசான் சிவவாக்கியார்

நன்றி.
. . ஓங்காரக்குடில் Ongarakudil
சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
 Aum Muruga ஓம் முருகா 

3 comments:

  1. நன்றி ஐயா...
    அருமையான பதிவு.
    ஒரே ஒரு சந்தேகம்....முகமது நபி எவ்வாறு ஒரு உயிரை வலிக்காமல் கொல்ல ஆராய்ச்சி செய்தார்.
    அதை நீங்கள் ஆமோதிப்பது சரியல்ல.
    புலால் உண்பதும், உயிர்க்கொலையும் தவறு...இதுல விதி விலக்கு இல்லை.
    நீங்கள் ஏன் ஒரு சாராருக்கு நல்லவராக முயற்சிக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. உண்மையை பதிவு செய்தமைக்கு 🙏🙏🙏

    ReplyDelete